SINGAPORE THAMIZHAR EYAKKAM

(SINGAPORE TAMILS’ MOVEMENT)

“ANNA ILLAM”
 35A Norris Road, Singapore - 208277   Tel:62938541 Fax:62910595 Website:www.thamizhareyakkam.org

தமிழ் மொழி விழா 2019 ன் ஒரு அங்கமாக வளர் தமிழ் இயக்கம் மற்றும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சி குழுவின் ஆதரவில் சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் ஏற்பாட்டில் ஏப்ரல் 14 ஆம் நாள் மாலை 6 மணியளவில் உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் "அழகு தமிழ் பழகு" என்ற நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. பொது மக்கள்,மாணவ மாணவியர் என 350 க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது . அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் தமிழ் பற்று கொண்ட பாடல்களுக்கு நடனமாடினர். செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் அவர்கள் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு ஆர் ராஜாராம் அவர்களும் மற்ற அமைப்பை சார்ந்த தலைவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . சிங்கப்பூர் தமிழர் இயக்க தலைவர் திரு ரெ செல்வராஜூ அவர்கள் தலைமையுரை வழங்கினார். தமிழர் இயக்க வரலாறு பற்றியும், தமிழர் இயக்கம் ஒவ்வொரு ஆண்டும் செய்கின்ற சேவைகள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றியும் தெரிவித்தார்.மேலும் சிங்கப்பூர் தமிழர் இயக்கம் கட்டடம் உருவாக்க அரும்பாடு பட்ட திரு ரெ வேலாயுதம் அவர்களையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். பின்னர் போட்டிகளில் பங்குபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பேசிய திரு விக்ரம் நாயர் அவர்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு சிங்கப்பூர் அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், இனி வரும் காலங்களில் பாலர் பள்ளிகளிலும் தமிழ் வழி பாடம் கற்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஆண்டு தோறும் தொய்வின்றி பற்பல நிகழ்ச்சிகளை நடத்தி வரும் சிங்கப்பூர் தமிழர் இயக்கத்திற்கு பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார். அதனை தொடர்ந்து சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் திரு ந .நாராயணசாமி அவர்கள் தனது நன்றியுரையின் போது தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும், நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த வளர்தமிழ் இயக்கத்திற்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொண்டார். இறுதியில் மதுரை முத்து குழுவினரின் பட்டிமன்றம் "இன்றைக்கு தமிழும்,கலாசாரமும் வளர்கிறதா ? தேய்கிறதா ? " என்ற தலைப்பில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. சிறப்பான கருத்துக்களாலும், நிறைந்திட்ட நகைச்சுவையாலும் வந்திருந்த பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் படி அமைந்தது. சிரிப்பலைகளால் அரங்கமே அதிர்ந்தது. சரியாக இரவு 9 மணியளவில் நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது.






















































Copyright @ Singapore Thamizhar Eyakkam @ 2013           |   Contact Us